உங்கள் சிறாரின் சாதனத்தில் பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைத்தல்
iOS 27, iPadOS 27, macOS 27, watchOS 27 ஆகியவை உங்கள் சிறாரின் சாதனங்களை நிர்வகிப்பதற்கான புதிய வழிகளுடன் மறுவடிவமைக்கப்பட்ட பெற்றோர் கட்டுப்பாடுகள் அனுபவத்தை வழங்குகின்றன. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் சாதனங்களைப் புதுப்பித்த பிறகு, ஒவ்வொரு சிறாருக்கும் ஒரு சுருக்கமான அமைவுச் செயல்முறை காட்டப்படும். நீங்கள் முன்பு அமைத்த பெற்றோர் கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்து மாற்றங்களைச் செய்யலாம் அல்லது முதல் முறையாகப் பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைக்கலாம்.
உங்கள் சிறாருக்கு முதன்முறையாக ஒரு சாதனத்தை அமைத்தால், iPhone அல்லது iPad, Mac அல்லது Apple Watch ஆகியவற்றை அமைப்பது குறித்த கட்டுரைகளைப் பார்க்கவும்.
படி 1: தொடங்குதல்
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் சாதனங்களைப் புதுப்பித்த பிறகு, உங்கள் சிறாருக்கான பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைக்குமாறு உங்களிடம் கேட்கப்படும். உங்கள் சிறார் எந்தெந்தச் செயலிகளை ஆராயலாம், எந்தெந்தத் தொடர்புகளைத் தொடர்புகொள்ளலாம், செயலிகள் மற்றும் இணையதளங்களை எப்போது அணுகலாம் மற்றும் பலவற்றை நீங்கள் அமைக்க முடியும்.
தொடங்க, “தொடங்குங்கள்” என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும். இந்தப் படிகளை இப்போது உங்களால் நிறைவுசெய்ய முடியாவிட்டால், குடும்பப் பகிர்வு அமைப்புகள் > (உங்கள் சிறாரின் பெயர்) என்பதற்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்.
படி 2: உங்கள் சிறார் அணுகக்கூடிய உள்ளடக்கத்தைத் தேர்வுசெய்தல்
உங்கள் சிறார் எந்தெந்தச் செயலிகள், இணையதளங்கள் மற்றும் உள்ளடக்கத்தை அணுகலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். நீங்கள் இரண்டு அமைப்புகளைத் தேர்வுசெய்யலாம்:
Safariஇல் அவர்களின் இணையதள அணுகலை நிர்வகித்தல்: “அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் மட்டும்” அல்லது “உலாவ அனுமதி கேள்” விருப்பங்களைப் பொறுத்தவரை, Safariஇல் புதிய தளத்தைப் பார்வையிடுவதற்கு முன் உங்கள் சிறார் உங்கள் ஒப்புதலைப் பெற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அந்தத் தளம் அணுகக்கூடியதாக இருக்கும். “பெரியோருக்கான தளங்களைக் கட்டுப்படுத்து” அம்சத்தைப் பயன்படுத்தும்போது, பெரியோருக்கான பல தளங்களுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்படும். இல்லையெனில் நீங்கள் இணையத்திற்கான வரம்பற்ற அணுகலை வழங்கலாம்.
குறிப்பு: 13 வயதிற்குட்பட்ட சிறார் கணக்கு உள்ள சிறார்களுக்கு “உலாவ அனுமதி கேள்” அம்சம் இயல்புநிலையாக ஆன் செய்யப்பட்டிருக்கும். 18 வயதிற்குட்பட்ட சிறார்களைப் பொறுத்தவரை, “பெரியோருக்கான தளங்களைக் கட்டுப்படுத்து” என்ற விருப்பம் இயல்புநிலையாக ஆன் செய்யப்பட்டிருக்கும். 13 வயதிற்குட்பட்ட சிறார்கள் புதிய இணையதளங்களைப் பார்க்கக் கோர வேண்டும், மேலும் 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் தடுக்கப்பட்ட அனைத்து இணையதளங்களையும் பார்க்க அனுமதி பெற வேண்டும். (நாடு அல்லது வட்டாரத்தைப் பொறுத்து இந்த வயது வரம்பு மாறுபடலாம்.)
உள்ளடக்கத்திற்கான அவர்களின் அணுகலைத் தேர்வுசெய்தல்: புத்தகங்கள் செயலி போன்ற Apple செயலிகள் மூலம் கிடைக்கும் புத்தகங்கள், திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் இசைக்கான வயது வரம்பு மதிப்பீடுகளை அமைக்கவும். உதாரணமாக, வயது வரம்பைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது வெளிப்படையான உள்ளடக்கத்தைத் தடுக்கலாம்.
குறிப்பு: 18 வயதிற்குக் குறைவான சிறார் கணக்கு உடைய சிறார்களைப் பொறுத்தவரை வயது அடிப்படையிலான உள்ளடக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள் இயல்பாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும், இதை எந்த நேரத்திலும் மாற்றலாம். (நாடு அல்லது வட்டாரத்தைப் பொறுத்து வயது மாறுபடக்கூடும்.)
முடித்ததும், “தொடர்க” என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் சிறார் யாருடன் தொடர்புகொள்ளலாம் என்பதைத் தேர்வுசெய்தல்
ஃபோன், மெசேஜஸ், FaceTime செயலிகளைப் பயன்படுத்தி உங்கள் சிறார் யார் யாருடன் தொடர்புகொள்ளலாம் என்பதை நிர்வகித்து, உணர்வைப் பாதிக்கும் உள்ளடக்கத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க உதவலாம்.
அவர்கள் யாருடன் பேசலாம் என்பதைத் தீர்மானித்தல்: உங்கள் சிறார் புதிதாக ஒருவருக்கு மெசேஜ் அனுப்பவோ அழைக்கவோ விரும்பும்போது, நீங்கள் முதலில் அந்தத் தொடர்பை மறுஆய்வு செய்து அங்கீகரிக்கலாம். குழுவில் உள்ள அனைவருக்கும் அங்கீகரிப்பு தேவையா அல்லது திரெட்டில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட தொடர்பு இருந்தால் போதுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
குறிப்பு: 13 வயது வரையிலான சிறார் கணக்கு உள்ள சிறார்களைப் பொறுத்த வரை தொடர்பு மேலாண்மை அம்சம் இயல்பாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும். 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார் கணக்கு உள்ள சிறார்களுக்கும் இதை ஆன் செய்யலாம். (நாடு அல்லது வட்டாரத்தைப் பொறுத்து வயது மாறுபடக்கூடும்.)
உணர்வைப் பாதிக்கக்கூடிய படங்கள் மற்றும் வீடியோக்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க உதவுதல்: நிர்வாணம் அல்லது கொடூரம் இடம்பெற்றிருப்பதாகக் கண்டறியப்பட்ட புகைப்படங்களை உங்கள் சிறார் அனுப்புவதில் அல்லது பெறுவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்க உதவலாம்.
முடித்ததும், “தொடர்க” என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
படி 4: உங்கள் சிறார் தனது சாதனத்தை எப்போது பயன்படுத்தலாம் என்பதைத் தேர்வுசெய்தல்
வாரநாட்கள் மற்றும் வார இறுதி நாட்களுக்குத் தனித்தனி அட்டவணைகளுடன் செயலிகள் மற்றும் இணையதளங்களை உங்கள் சிறார் பயன்படுத்தக்கூடிய நேரத்தை அமைக்கவும். இந்த நேரங்களுக்கு வெளியே, பெரும்பாலான செயலிகளும் அறிவிப்புகளும் இடைநிறுத்தப்படும். இந்த அம்சம் இதற்கு முன்பு “செயல்படா நேரம்” என அழைக்கப்பட்டது, இப்போது உங்கள் சிறாரின் தினசரி அட்டவணைக்குள்ளேயே சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிற்கும் “கிடைக்கும் நேரம்”, “இதற்கு முன்பு வரை கிடைக்கும்” நேரம் ஆகியவற்றைத் தேர்வுசெய்யவும்.
முடித்ததும், “தொடர்க” என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
படி 5: உங்கள் சிறார் கவனம் செலுத்த உதவுவதற்காக பள்ளி நேரத்தை அமைத்தல்
நீங்கள் பள்ளி நேரத்தில் பொழுதுபோக்கு, கேம்கள், சமூக ஊடகம் போன்ற செயலி வகைகளை இடைநிறுத்தி, உங்கள் சிறார் பள்ளியில் கவனம் செலுத்த உதவலாம். பிற செயலிகளும் இணையதளங்களும் முழுமையாக அணுகக்கூடியதாக இருக்கும்.
“பள்ளி நேரத்தில் இடைநிறுத்து” என்பதை ஆன் செய்து, பள்ளி நாளின் தொடக்க நேரம் மற்றும் இறுதி நேரத்தை அமைக்கவும்.
முடித்ததும், “தொடர்க” என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
படி 6: நேர ஒதுக்கீடுகளை அமைத்தல்
முன்பு செயலி வரம்புகள் என அழைக்கப்பட்ட நேர ஒதுக்கீடுகள், இப்போது குடும்பங்கள் பெரும்பாலும் நிர்வகிக்க விரும்பும் செயலி வகைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன: பொழுதுபோக்கு, கேம்கள் மற்றும் சமூக ஊடகம். நீங்கள் மூன்று வகைகளுக்கும் மொத்த நேரத்தை அமைக்கலாம், பிறகு ஏதேனும் ஒரு வகைக்கு நேரத்தைச் சரிசெய்யலாம்.
நீங்கள் வரம்பை அமைக்கும்போது, மருத்துவ மற்றும் சிறார் மேம்பாட்டு நிபுணர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் உங்கள் சிறாரின் வயதிற்கேற்ப வழிகாட்டுதலைப் பார்ப்பீர்கள். நேரத்தைச் சரிசெய்ய ஸ்லைடரை இழுத்து, அது பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்குள் வருகிறதா எனப் பார்க்கலாம்.
உங்கள் குடும்பத்திற்குப் பொருத்தமான விதத்தில் நீங்கள் வகைகளையும் சேர்க்கலாம் அல்லது ஒரு வகையின் கீழ் உள்ள செயலிகளையும் மாற்றலாம்.
முடித்ததும், “தொடர்க” என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
படி 7: பாஸ்கோடை உருவாக்குதல்
உங்கள் சிறார் யூகிக்க முடியாத வகையில் நான்கு இலக்க பாஸ்கோடை உருவாக்கவும். பெற்றோர் கட்டுப்பாடுகள் அல்லது சிறார்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை மாற்றும்போது இந்த பாஸ்கோடை நீங்கள் உள்ளிட வேண்டும்.
முடித்ததும், “தொடர்க” என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.
அடுத்து என்ன?
நீங்கள் இப்போது தேர்ந்தெடுத்த பெற்றோர் கட்டுப்பாடுகள் குறித்து கூடுதல் தகவல்களைப் பெற, உங்கள் சிறாரின் சாதனத்தில் பெற்றோர் கட்டுப்பாடுகளைத் தொடங்குதல் என்பதைப் பார்க்கவும்.
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் குடும்பப் பகிர்வு அம்சத்தைப் புதிதாகப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் குடும்பக் குழுவுடன் செய்யக்கூடிய சாத்தியமானவை குறித்து கூடுதல் தகவல்களைப் பெறுங்கள், எடுத்துக்காட்டாக வாங்குதல்கள், சந்தாக்களைப் பகிர்தல், தொலைந்த சாதனங்களைக் கண்டறிய உதவுதல் மற்றும் பல. குடும்பப் பகிர்வைப் பயன்படுத்தத் தொடங்குதல் என்பதைப் பார்க்கவும்.