American Academy of Pediatrics (AAP) வழங்கும் திரை நேர வழிகாட்டல்
American Academy of Pediatrics (AAP) திரைப் பயன்பாடு தொடர்பாகக் குடும்பங்கள் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்குவதற்கு உதவ ஆராய்ச்சி அடிப்படையிலான வழிகாட்டலை வழங்குகிறது. குடும்பங்கள் தங்கள் சிறார்கள் மீடியாவை எதற்காக, எப்படி, ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று சிந்திக்கவும், மேலும் அவர்கள் வளரும்போது அது குறித்து உரையாடல்களைத் தொடர்ந்து மேற்கொள்ளவும் AAP அவர்களை ஊக்குவிக்கிறது.
வயதுக் குழுவின் அடிப்படையிலான திரை நேர வழிகாட்டல்
கீழே உள்ள வழிகாட்டல் மருத்துவ மற்றும் சிறார் மேம்பாட்டு ஆராய்ச்சியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தொடங்கப் புள்ளியை வழங்கும் நோக்கத்துடன் உள்ளது, இதன் மூலம் குடும்பங்கள் தங்கள் சிறாருக்கு ஏற்ற வகையில் அமைப்புகளைச் சரிசெய்யலாம்.
5 மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய சிறார்களுக்கான வழிகாட்டல்:
2 வயதிற்குக் கீழ்: பொதுவாக இந்த வயதுப் பிரிவினருக்கு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான வீடியோ அழைப்புகளைத் தவிர, திரை நேரத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதை ஆய்வு மற்றும் நிபுணர் வழிகாட்டல்கள் பரிந்துரைக்கின்றன. இந்த வயதில் குழந்தைகளும் மழலையர்களும் விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடுவதன் மூலமும், தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் தொடர்ந்து உரையாடுவதன் மூலமும் நன்றாகக் கற்றுக்கொள்கிறார்கள்.
2–5 வயது சிறார்கள்: இந்த வயதில்தான் இளம் சிறார்கள் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறார்கள், இதில் டிஜிட்டல் மீடியாவைப் பயன்படுத்துவதும் அடங்கும். மீடியா வரம்புகளை அமைத்தல், விளையாடுவது, ஒன்றாக உட்கார்ந்து வாசிப்பது, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது போன்றவற்றுக்கான நேரத்தைப் பாதுகாக்க உதவுகிறது. எந்தவொரு நிகழ்ச்சியும் வயதுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பொதுவாகப் பிறருடன் சேர்ந்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் திரையில் காட்டப்படுவதைப் பற்றி நீங்கள் பேச முடியும். இந்த வயதில் பெரிய உணர்வுகளும் ஒரு பகுதியாகும், மேலும் பல்வேறு உத்திகளைக் கொண்டு சிறார்கள் அந்த உணர்வுகளைச் சமாளிக்க உதவுவது ஆரம்பத்திலேயே ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்க உதவும்.
6-12 வயது சிறார்களுக்கான வழிகாட்டல்கள்: இந்த வயதில் உறக்கம், ஓடியாடி விளையாடுதல், குடும்பத்துடன் நேரம் செலவிடுதல் போன்றவற்றுக்குப் போதுமான நேரம் ஒதுக்குவது முக்கியம். கல்வி சார்ந்த மதிப்புள்ள தரமான உள்ளடக்கத்தைத் தேடவும், வாய்ப்பிருந்தால் தானாக பிளே செய்தல், முடிவில்லாத ஸ்க்ராலிங் போன்றவற்றை ஆஃப் செய்யவும். பல நிபுணர்கள், சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்கு 13 வயது ஆக வேண்டும் எனப் பரிந்துரைக்கின்றனர்.
13-17 வயதுடைய பதின்ம வயதினருக்கான வழிகாட்டல்: பதின்ம வயதினருக்குப் படிப்படியான சுதந்திரம் வழங்கப்படும்போது அவர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர் என்பதைப் பல குடும்பங்கள் தெரிந்துகொள்கின்றன. அவர்கள் ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்ளும்போது ஆரம்பத்தில் அதிக வழிகாட்டலும் மேற்பார்வையும், அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளும்போது அதிக சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாகப் பதின்ம வயதின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைத் தொடர்ந்து மதிப்பிடவும். மேலும் உறக்கம், குடும்பம், உடல் செயல்பாடு, மற்றவர்களுடன் பழகுவது போன்ற அவசியமானவற்றுக்கு அவர்கள் நேரம் ஒதுக்கும்படியும் பார்த்துக்கொள்ளவும்.
அதிக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள பதின்ம வயதினருக்கு, சாதனத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய இடையூறுகள் உள்ளனவா என்பதற்கான அறிகுறிகளைக் கவனிக்கவும். அதாவது உறக்கமின்மை, கட்டாயப் பயன்பாடு, மதிப்பெண்கள் குறைதல் அல்லது தன்னைப் பற்றிய கவலைகள் போன்றவை. மேலும், அவர்களிடம் எப்போதும் சகஜமாக உரையாடிக் கொண்டிருக்கவும், இதனால் பதின்ம வயதினருக்கு உதவி தேவைப்பட்டால் உங்களிடம் இருந்து அதைப் பெறலாம் என அவர்கள் உணர்வார்கள்.
ஆரோக்கியமான திரை நேரப் பழக்கவழக்கங்களை உருவாக்குவதற்கான உதவிக்குறிப்புகள்
திரைப் பயன்பாடு குறித்த முடிவுகளை வழிநடத்த, American Academy of Pediatrics அமைப்பு “5C” கோட்பாட்டைக் கவனத்தில்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது:
சிறார் (Child): உங்கள் சிறாரின் வயது, மனநிலை, வளர்ச்சிப் பருவம் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளவும். சிறார் ஒரே வகையான அல்லது ஒரே அளவு மீடியாவுக்கு வித்தியாசமாக எதிர்வினையாற்றலாம்.
உள்ளடக்கம் (Content): பரபரப்பான அல்லது வன்முறை சார்ந்த மீடியாவைவிடக் கல்வி சார்ந்த, வயதுக்கு ஏற்ற மற்றும் நேர்மறையான உள்ளடக்கத்தைத் தேர்வுசெய்யவும்.
அமைதி (Calm): மீடியா பயன்பாடு உங்கள் சிறாரின் உணர்ச்சிகளைச் சீராக்கும் திறனுக்கு உதவுமா அல்லது பாதிக்குமா என்பதைப் பற்றிச் சிந்திக்கவும்.
ஓரம் கட்டுதல் (Crowding out): திரை நேரத்தால் எந்தெந்தச் செயல்பாடுகள் (உறக்கம், உடல் செயல்பாடு, வீட்டுப்பாடம், வெளிப்புற விளையாட்டு, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் செலவிடும் நேரம் போன்றவை) மாறுபடுகின்றன என்பதைக் கவனித்துக் கொள்ளவும், அந்தச் செயல்பாடுகளுக்கு அதிக நேரம் ஒதுக்கவும்.
தகவல்தொடர்பு (Communication): குழந்தைகள் ஆன்லைனில் என்ன பார்க்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது பற்றி அவர்களுடன் பேசி, மீடியாக்களைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு உதவவும்.
உங்கள் குடும்பத்திற்கான ஆரோக்கியமான திரை நேரப் பழக்கவழக்கங்களை அமைப்பது தொடர்பாக, கவனத்தில் கொள்ள வேண்டிய சில கூடுதல் விஷயங்கள்:
குடும்பத்துடன் சாப்பிடும் நேரம் அல்லது படுக்கையறைகள் போன்ற குறிப்பிட்ட நேரங்களிலும் இடங்களிலும் சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது உரையாடலில் ஈடுபடவும் சிறார்கள் சாதனங்களைவிட்டு விலகி இருப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது.
குறிப்பாகச் சிறார்களுக்கு உறக்கம் முக்கியம். ஆரோக்கியமான உறக்கத்தைப் பெற, படுக்கையறைக்கு வெளியே சாதனங்களை சார்ஜ் செய்யவும், படுக்கைக்குச் செல்வதற்குச் சுமார் ஒரு மணிநேரத்திற்கு முன்பு சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தவும் AAP பரிந்துரைக்கிறது.
சிறார்கள் பெரும்பாலும் தங்களைச் சுற்றியுள்ள பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்கின்றனர், எனவே நீங்கள் உங்கள் சாதனங்களைப் பயன்படுத்தும் விதம் அவர்களின் பழக்கவழக்கங்களை வடிவமைக்க உதவலாம்.
AAP வழங்கும் தகவல் களஞ்சியம்
குடும்ப மீடியா திட்டம்: AAP ஓர் இலவசக் கருவியை வழங்குகிறது. இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சாதனங்கள் இல்லாத நேரங்கள், உறக்க நேரம் மற்றும் தினசரிப் பழக்கவழக்கங்கள் உட்பட திரைப் பயன்பாட்டிற்கான பிரத்தியேகத் திட்டத்தை உருவாக்க உதவுகிறது. AAP இணையதளத்தில் உள்ள குடும்ப மீடியா திட்டம் என்பதைப் பார்க்கவும்.
மீடியா பயன்பாட்டின் 5C கோட்பாடு: மீடியா பயன்பாட்டின் 5C கோட்பாட்டை மையமாக வைத்து வயது அடிப்படையிலான வழிகாட்டல், உதவிக்குறிப்புகள் மற்றும் தகவல்களை AAP வழங்குகிறது. AAP இணையதளத்தில் உள்ள சிறார்கள் மற்றும் திரை நேரம்: மீடியா வழிகாட்டலின் 5C கோட்பாட்டைப் பயன்படுத்தும் விதம் என்பதைப் பார்க்கவும்.
ஆரம்பகாலக் குழந்தை வளர்ச்சி மற்றும் திரை நேர டூல்கிட்: AAP குடும்பங்களுக்கு ஆரோக்கியமான மீடியா பழக்கவழக்கங்களை உருவாக்க உதவும் தகவல்களை வழங்குகிறது. AAP இணையதளத்தில் உள்ள ஆரம்பகால குழந்தை வளர்ச்சி மற்றும் திரை நேர டூல்கிட் என்பதைப் பார்க்கவும்.
திரை நேர வழிகாட்டல்கள்: சமூக ஊடகங்களில் பதின்ம வயதினர் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பது குறித்த பொதுவான கேள்விகளுக்கு AAP ஆதாரப்பூர்வ அடிப்படையிலான வழிகாட்டலுடன் பதிலளிக்கிறது. AAP இணையதளத்தில் உள்ள திரை நேர வழிகாட்டல்கள் என்பதைப் பார்க்கவும்.