படிநிலை 1: திரை நேரம் குறித்து உங்கள் சிறாருடன் உரையாடுதல்
American Academy of Pediatrics (AAP) வழங்கும் திரை நேர வழிகாட்டல்களை மறுஆய்வு செய்து, உங்கள் குடும்பத்திற்கு எது பொருத்தமானது என்பதைப் பற்றிச் சிந்தித்த பிறகு, அடுத்த கட்டமாக உங்கள் சிறாருடன் பேச வேண்டும். இந்த உரையாடல்கள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் விதிகளின் தொகுப்பாக அல்லாமல், அவர் வளர வளரத் தொடர்ந்து அடிக்கடி பேசுவதற்கான உரையாடல்களாக இவை செயல்படும்.
உங்கள் சிறாருடன் உரையாடலைத் தொடங்குதல்
சிறு குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போது அவர்களின் கண்ணோட்டத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். மேலும் அவர்களுடன் சேர்ந்து எளிமையான, இருவருக்குமான ஒப்பந்தங்களை உருவாக்கலாம். இதில் உணவு நேரங்களிலும், உறங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்பும், படுக்கையறைகள் போன்ற இடங்களிலும் சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதும் அடங்கும். நீங்கள் அமைக்கும் வரம்புகளுக்கான காரணங்களை விளக்கவும். வளர்ந்து வரும் குழந்தையின் உடலுக்கும் மனதிற்கும் உறக்கம், ஓடியாடுதல், வெளியே விளையாடுதல் ஆகியவை முக்கியம். மேலும், நீங்கள் விவாதிக்கும் வரம்புகளைப் பயன்படுத்தும் வகையில் அவரின் Apple சாதனத்தில் உள்ள திரை நேர அமைப்புகளைச் சரிசெய்யலாம்.
உங்கள் சிறார் வளர வளர, ஆரம்பத்தில் அவருக்கான வரம்புகளை நீங்கள் அமைத்ததுபோக அதன்பின் அவரே திரை நேரத்தை நிர்வகிக்க வேண்டும் என விரும்புவீர்கள், அவர் பெரியவரானதும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஏற்கெனவே வளர்த்துக் கொண்டிருப்பார். அவர்கள் சாதனத்தை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய உரையாடலை, அவர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய உரையாடலாக மாற்றலாம். குற்றம் சாட்டும் மனப்பான்மையை விடுத்து தெரிந்துகொள்ள ஆர்வமாக இருங்கவும்.
அதன் இணையதளத்தில் AAP உரையாடலைத் தொடங்குவதற்கான வழிகளை வழங்குகிறது, தேவைக்கேற்ப நீங்கள் மாற்றியமைக்கலாம், எடுத்துக்காட்டாக:
“நமது குடும்பம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு எப்படி வரம்புகளை அமைக்க வேண்டும் என்பது பற்றி பேசுவோமா? இந்த முடிவுகளில் நீயும் இருக்கவேண்டும் என்பதால், இதைப் பற்றி சேர்ந்து செயல்படுவோம்.”
“பகலில் குறிப்பிட்ட நேரங்களில் சாதனங்கள் அல்லது ஃபோன்களைப் பயன்படுத்தக் கூடாது என நினைக்கிறீயா? உதாரணமாக, குடும்பத்தோட இரவு உணவு சாப்பிடும்போது.”
“நான் சாதனத்தையோ ஃபோனையோ பயன்படுத்தாமல் உன்னுடன் இருக்க வேண்டிய முக்கியமான நேரங்கள் ஏதேனும் இருக்கா?”
கூடுதல் பரிந்துரைகளுக்கு, AAP வழங்கும் மீடியா குறித்த குடும்பங்களுக்கான உரையாடல் தொடக்கங்கள் என்பதைப் பார்க்கவும்.
உங்கள் சிறாருக்கு டிஜிட்டல் கல்வியறிவை வளர்க்க உதவுதல்
உங்கள் சிறாருடன் திரை நேரம் குறித்து உரையாடும்போது, அவருக்கு டிஜிட்டல் கல்வியறிவை வளர்க்க நீங்கள் உதவலாம். இது தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பாகவும் கவனமாகவும் பயன்படுத்துவது பற்றிய அறிவாகும். ஆன்லைனில் எதைப் பகிர வேண்டும், யாரை நம்ப வேண்டும், பிறரை எப்படி நடத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் சிறாருக்கு நீங்கள் உதவலாம். உங்களுக்குத் தெரியவரும் தவறான தகவல்கள் பற்றிய எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டுக் காட்டலாம், இன்ஃப்ளுயன்சர்களும் விளம்பரங்களும் விற்பனை செய்யும் விஷயங்களைப் பற்றிக் கேள்வி கேட்கலாம், பயன்படுத்துவதை நிறுத்துவதற்குக் கடினமாக இருக்கும் செயலிகளைப் பற்றிப் பேசலாம். உரையாடலைத் தகவல் பரிமாற்றமாக வைத்திருப்பதன் மூலம் இணைய அச்சுறுத்தல் மற்றும் தனியுரிமை போன்ற கடினமான தலைப்புகளையும் பேச வழிவகுக்கிறது. இதனால் உங்கள் சிறார் எதைப் பற்றியும் உங்களிடம் வந்து பேசலாம் என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.
மேலும் தகவலுக்கு, டிஜிட்டல் உலகில் வளரும் சிறார்களுக்கு உதவுதல்: AAP கொள்கை விளக்கம் என்பதைப் பார்க்கவும்.