iPhone பேட்டரி மற்றும் செயல்திறன்
iPhoneனின் செயல்திறனையும் அதற்கும் உங்கள் பேட்டரிக்கும் உள்ள தொடர்பையும் புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் iPhone எளிமையாகவும் பயன்படுத்த எளிதாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பங்கள், அதிநவீன பொறியியல் ஆகியவற்றின் கலவையால் மட்டுமே இது சாத்தியமாகிறது. பேட்டரி மற்றும் செயல்திறன் ஒரு முக்கியமான தொழில்நுட்பப் பகுதி ஆகும். பேட்டரிகள் ஒரு சிக்கலான தொழில்நுட்பமாகும். பேட்டரியின் செயல்திறன், அதனுடன் தொடர்புடைய iPhone செயல்திறன் ஆகிய இரண்டையும், மாறக்கூடிய பல்வேறு விஷயங்கள் தீர்மானிக்கின்றன. சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் அனைத்தும் நுகர்பொருட்கள் என்பதால் குறைந்த ஆயுட்காலம் கொண்டவை - இறுதியில் அவற்றின் திறனும் செயல்திறனும் குறைவதால் அவற்றை மாற்ற வேண்டியிருக்கும். iPhone பேட்டரிகள் குறித்தும் பேட்டரியின் வயது iPhone செயல்திறனை எப்படிப் பாதிக்கலாம் என்பது குறித்தும் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
லித்தியம்-அயன் பேட்டரிகள் குறித்த அறிமுகம்
iPhone பேட்டரிகள் லித்தியம்-அயன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. பழைய தலைமுறை பேட்டரி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும்போது, லித்தியம்-அயன் பேட்டரிகள் வேகமாக சார்ஜ் ஆகும் மற்றும் நீண்ட காலம் நீடிக்கும். நீண்ட பேட்டரி ஆயுளைத் தரக்கூடிய அதிகத் திறன் அடர்த்தி அவற்றுக்கு இருப்பதுடன், எளிய எடையில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம்-அயன் தொழில்நுட்பம் உங்கள் சாதனத்திற்கான சிறந்த தொழில்நுட்பத்தைத் தற்போது வழங்குகிறது. லித்தியம்-அயன் பேட்டரிகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
பேட்டரி செயல்திறனை எப்படி அதிகரிப்பது?
"பேட்டரி ஆயுள்" என்பது ஒரு சாதனம் சார்ஜ் செய்யப்பட வேண்டிய அவசியம் வரும் வரை செயல்படும் நேரம். "பேட்டரி ஆயுட்காலம்" என்பது ஒரு பேட்டரி மாற்றப்பட வேண்டிய அவசியம் வரும் வரை செயல்படும் நேரம். உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தும் விதம் பேட்டரி ஆயுளையும் ஆயுட்காலத்தையும் பாதிக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் சாதனத்தை எப்படிப் பயன்படுத்தினாலும், உதவ வழிகள் உள்ளன. ஒரு பேட்டரியின் ஆயுட்காலம் அதன் "வேதியியல் வயது" உடன் தொடர்புடையது, இதை வெறும் நாட்களில் மட்டும் அளவிட முடியாது. சார்ஜ் சுழற்சிகளின் எண்ணிக்கை, பேட்டரி பராமரிக்கப்பட்ட விதம் போன்ற பல்வேறு காரணிகள் அதைத் தீர்மானிக்கின்றன.
பேட்டரி செயல்திறனை அதிகரிப்பது மற்றும் பேட்டரி ஆயுட்காலத்தை நீட்டிப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணத்திற்கு:
உங்கள் iPhone நீண்ட நேரம் சேமிக்கப்படும் போது அதை பாதி சார்ஜ் செய்தே வைத்திருங்கள்.
உங்கள் iPhone நீண்ட நேரம் சார்ஜ் செய்வதையோ அல்லது நேரடி சூரிய ஒளியில் வெளிப்படுவது உட்பட வெப்பமான சூழல்களில் வைத்திருப்பதையோ தவிர்க்கவும்.
பேட்டரிகள் வேதியியல் ரீதியாகப் பழையது ஆகும்போது என்ன நடக்கும்?
சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் அனைத்தும் வேதியியல் ரீதியில் பழையது ஆகும்போது அவற்றின் செயல்திறன் குறைந்துவிடும்.
லித்தியம்-அயன் பேட்டரிகள் வேதியியல் ரீதியாக பழையது ஆகும்போது, அவை சேமித்து வைத்துக் கொள்ளக்கக்கூடிய சார்ஜ் அளவு குறைந்துவிடும். இதனால் சாதனத்தை வெகு சீக்கிரம் சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இதை பேட்டரியின் அதிகபட்சத் திறன் என்று குறிப்பிடலாம் - இது பேட்டரி புதியதாக இருந்தபோது அதற்கிருந்த திறனுடன் ஒப்பிடும்போது இப்போது உள்ள திறனின் அளவீடு. அது மட்டுமின்றி, பேட்டரியால் உடனடியாக வழங்கக்கூடிய அதிகபட்சச் சக்தி அல்லது "உச்சபட்சச் சக்தி" குறையக்கூடும். ஒரு மொபைல் சரியாகச் செயல்பட, பேட்டரியில் உள்ள மின்சக்தியை எலக்ட்ரானிக்ஸால் உடனடியாகப் பயன்படுத்த முடிய வேண்டும். உடனடியாகக் கிடைக்கும் இந்தச் சக்தியை பேட்டரியின் மின்னெதிர்ப்பு பாதிக்கிறது. பேட்டரியின் மின்னெதிர்ப்பு அதிகமாக இருந்தால், தேவைப்படும் சிஸ்டத்திற்கு போதுமான சக்தியை அதனால் வழங்க முடியாமல் போகலாம். பேட்டரியின் வயது அதிகமாக இருந்தால் அதன் மின்னெதிர்ப்பு அதிகரிக்கலாம். சார்ஜ் குறைவாக இருக்கும்போதும், குளிர்ந்த வெப்பநிலையிலும் பேட்டரியின் மின்னெதிர்ப்பு தற்காலிகமாக அதிகரிக்கும். இதனுடன், வேதியியல் வயதும் அதிகமாக இருந்தால் மின்னெதிர்ப்பு குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக இருக்கும். இவை தொழில்துறையில் உள்ள அனைத்து லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கும் பொதுவான பேட்டரி வேதியியலின் பண்புகளாகும்.
ஒரு சாதனம் அதிக மின்னெதிர்ப்பு உள்ள பேட்டரியில் இருந்து சக்தியை எடுக்கும்போது, பேட்டரியின் வோல்டேஜ் அதிக அளவில் குறையும். எலக்ட்ரானிக் பாகங்கள் சரியாக இயங்க குறைந்தபட்ச வோல்டேஜ் தேவை. இதில் சாதனத்தின் அகச் சேமிப்பகம், மின் சர்க்யூட்கள், பேட்டரி ஆகியவை அடங்கும். மின்சாரத்தை வழங்க இந்த பேட்டரிக்கு உள்ள திறனை மின் மேலாண்மை அமைப்பு தீர்மானிக்கிறது. மேலும், செயல்பாடுகளைப் பராமரிப்பதற்கான லோடுகளையும் இது நிர்வகிக்கிறது. மின் மேலாண்மை அமைப்பின் முழுத் திறன்களுடனும் செயல்பாடுகளை ஆதரிக்க முடியாதபோது, இந்த எலக்ட்ரானிக் பாகங்களைப் பாதுகாக்க சிஸ்டம் ஷட் டவுன் செய்யும். சாதனம் ஒரு காரணத்திற்காக ஷட் டவுன் செய்தாலும், பயனருக்கு இது எதிர்பாராததாக இருக்கலாம்.
எதிர்பாராத ஷட் டவுன்களைத் தடுத்தல்
உங்கள் பேட்டரியில் சார்ஜ் குறைவாக இருந்தாலோ, அதன் வேதியியல் வயது அதிகமாக இருந்தாலோ, நீங்கள் குளிர்ந்த வெப்பநிலைப் பகுதியில் இருந்தாலோ எதிர்பாராத ஷட் டவுன்களை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம். கடுமையான சூழல்களில், ஷட் டவுன்கள் அடிக்கடி நிகழலாம். இதனால் சாதனம் நம்பகத்தன்மையற்றதாகவோ பயன்படுத்த முடியாததாகவோ மாறும். iPhone 6, iPhone 6 Plus, iPhone 6s, iPhone 6s Plus, iPhone SE (முதல் தலைமுறை), iPhone 7, iPhone 7 Plus ஆகியவற்றில் சாதனம் எதிர்பாராதவிதமாக ஷட் டவுன் ஆவதைத் தடுக்க செயல்திறன் உச்சங்களை iOS தேவைக்கேற்ப நிர்வகிக்கிறது. எனவே நீங்கள் உங்கள் iPhoneனைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த செயல்திறன் மேலாண்மை அம்சம் iPhoneக்கு மட்டுமே பொருந்தும், வேறு எந்த Apple தயாரிப்புகளுக்கும் பொருந்தாது. iOS 12.1 பதிப்பில் தொடங்கி, iPhone 8, iPhone 8 Plus, iPhone X ஆகியவற்றில் இந்த அம்சம் கிடைக்கும்; iOS 13.1 பதிப்பில் தொடங்கி iPhone XS, iPhone XS Max, iPhone XR ஆகியவற்றில் இந்த அம்சம் கிடைக்கும். iPhone 11 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் செயல்திறன் மேலாண்மை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
சாதனத்தின் வெப்பநிலை, பேட்டரி சார்ஜ் நிலை, பேட்டரி மின்னெதிர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் iPhone செயல்திறன் மேலாண்மை செயல்படுகிறது. எதிர்பாராத ஷட் டவுன்களைத் தடுக்க இந்த விஷயங்கள் தேவைப்பட்டால் மட்டுமே, CPU, GPU போன்ற சில சிஸ்டம் பாகங்களின் அதிகபட்ச செயல்திறனை iOS தேவைக்கேற்ப நிர்வகிக்கும். இதனால், சாதனத்தின் பணிச்சுமைகள் தானாகவே சமநிலை அடையும். ஒரே நேரத்தில் அதிகமாகவும் விரைவாகவும் பணிகள் நடைபெறுவதற்குப் பதிலாக, சிஸ்டம் பணிகள் சீராக விநியோகிக்கப்படும். சில சந்தர்ப்பங்களில், சாதனத்தின் செயல்திறனில் எந்த வித்தியாசமும் இருக்காது. உங்கள் சாதனத்திற்குத் தேவைப்படும் செயல்திறன் மேலாண்மை அளவைப் பொறுத்து வித்தியாசங்கள் இருக்கலாம்.
மிகவும் தீவிரமான செயல்திறன் மேலாண்மை தேவைப்படும் சூழல்களில், இவை போன்ற விளைவுகளைக் கவனிக்கலாம்:
ஆப்ஸ் தொடங்க அதிக நேரம் எடுத்துக்கொள்வது
ஸ்க்ரோல் செய்யும்போது ஃபிரேம் வீதங்கள் குறைவாக இருப்பது
பேக்லைட் மங்கலாக இருப்பது (கட்டுப்பாட்டு மையத்தில் இதை மாற்றலாம்)
ஸ்பீக்கர் ஒலியளவு -3dB வரை குறைவது
சில ஆப்ஸில் ஃபிரேம் வீதங்கள் படிப்படியாகக் குறைவது
மிகவும் கடுமையான சூழல்களில், கேமரா UI-யில் தெரியும்படி கேமரா ஃபிளாஷ் ஆஃப் செய்யப்படும்.
பின்னணியில் புதுப்பிக்கப்படும் ஆப்ஸ் தொடங்கப்பட்டதும் அவற்றை மீண்டும் ஏற்ற வேண்டியிருக்கலாம்.
இந்தச் செயல்திறன் மேலாண்மை அம்சத்தால் பல முக்கிய அம்சங்கள் பாதிக்கப்படுவதில்லை. இவற்றில் சில:
செல்லுலார் அழைப்பின் தரம் மற்றும் நெட்வொர்க்கிங் செயல்திறன்
எடுத்துள்ள படம் மற்றும் வீடியோவின் தரம்
GPS செயல்திறன்
இருப்பிடத் துல்லியம்
ஆக்சலரோமீட்டர், காற்றழுத்தமானி, திசைகாட்டி போன்ற சென்சார்கள்
Apple Pay
பேட்டரியில் சார்ஜ் குறைவாக இருந்தாலோ, நீங்கள் குளிர்ந்த வெப்பநிலைப் பகுதியில் இருந்தாலோ செயல்திறன் மேலாண்மை மாற்றங்கள் தற்காலிகமானவை. ஒரு சாதன பேட்டரி வேதியியல் ரீதியாக போதுமான அளவு பழையதாகிவிட்டால், செயல்திறன் மேலாண்மை மாற்றங்கள் மேலும் நீடிக்கலாம். ஏனென்றால், சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் அனைத்தும் நுகர்பொருட்கள் என்பதால் குறைந்த ஆயுட்காலம் கொண்டவை - இறுதியில் அவற்றை மாற்ற வேண்டியிருக்கும். நீங்கள் இதனால் பாதிக்கப்பட்டு உங்கள் சாதனத்தின் செயல்திறனை மேம்படுத்த விரும்பினால், உங்கள் சாதன பேட்டரியை மாற்றுவது உதவியாக இருக்கும்.
iOS 11.3 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளுக்கு
எதிர்பாராத ஷட் டவுன்களைத் தவிர்க்கத் தேவையான செயல்திறன் நிர்வாகத்தின் அளவை அவ்வப்போது மதிப்பிடுவதன் மூலம் iOS 11.3 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள் செயல்திறன் நிர்வாகத்தை மேம்படுத்துகின்றன. கண்டறியப்பட்ட உச்ச மின் தேவைகளை பேட்டரியின் திறனால் பூர்த்திசெய்ய முடிந்தால், செயல்திறன் மேலாண்மையின் அளவு குறைக்கப்படும். எதிர்பாராத ஷட் டவுன் மீண்டும் ஏற்பட்டால் செயல்திறன் மேலாண்மை அதிகரிக்கப்படும். இந்த மதிப்பீடு தொடர்ந்து நடைபெறுவதால் சூழலுக்கு ஏற்ற செயல்திறன் நிர்வாகத்தை அதிகரிக்கிறது.
ஒட்டுமொத்த சிஸ்டம் செயல்திறனை அதிகரிக்க, iPhone 8 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள் மேம்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் வடிவமைப்பைப் பயன்படுத்துகின்றன. இது மின் தேவைகள், பேட்டரியின் மின் திறன் ஆகிய இரண்டுக்கும் மிகவும் துல்லியமான மதிப்பீட்டை வழங்குகிறது. இது எதிர்பாராத ஷட் டவுனை iOS மிகவும் துல்லியமாக எதிர்பார்க்கவும் தவிர்க்கவும் அனுமதிக்கிறது. இதனால், செயல்திறன் நிர்வாகத்தின் விளைவுகள் iPhone 8 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் குறைவாகவே கவனிக்கப்படலாம். காலப்போக்கில், அனைத்து iPhone மாடல்களிலும் உள்ள சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளின் திறனும் உச்சபட்சச் சக்தியும் குறைந்து, இறுதியில் அவற்றை மாற்ற வேண்டியிருக்கும்.

பேட்டரியின் திறன்
iPhone 6 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில், பேட்டரியின் திறனைக் காட்டவும், பேட்டரியை மாற்ற வேண்டியிருந்தால் பரிந்துரைக்கவும் புதிய அம்சங்களை iOS சேர்க்கிறது. அமைப்புகள் > பேட்டரி > பேட்டரி ஹெல்த் & சார்ஜிங் (iOS 16.0 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில், அமைப்புகள் > பேட்டரி > பேட்டரி ஹெல்த்) என்ற பிரிவில் இந்த அம்சங்களைப் பார்க்கலாம்.
கூடுதலாக, எதிர்பாராத ஷட் டவுன்களைத் தடுக்க அதிகபட்சச் செயல்திறனைத் தேவைக்கு ஏற்ப நிர்வகிக்கும் செயல்திறன் மேலாண்மை அம்சம் ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கலாம், தேவைப்பட்டால் அதை ஆஃப் செய்யலாம். அதிகபட்ச மின்சக்தியை உடனடியாக வழங்கும் திறன் குறைவாக உள்ள பேட்டரி இருக்கும் சாதனத்தில் எதிர்பாராத விதமாக முதலில் ஷட் டவுன் ஏற்பட்ட பின்னரே இந்த அம்சம் ஆன் செய்யப்படும். இந்த அம்சம் iPhone 6, iPhone 6 Plus, iPhone 6s, iPhone 6s Plus, iPhone SE (முதல் தலைமுறை), iPhone 7, iPhone 7 Plus ஆகியவற்றுக்குப் பொருந்தும். iOS 12.1 பதிப்பில் தொடங்கி, iPhone 8, iPhone 8 Plus, iPhone X ஆகியவற்றில் இந்த அம்சம் கிடைக்கும்; iOS 13.1 பதிப்பில் தொடங்கி iPhone XS, iPhone XS Max, iPhone XR ஆகியவற்றில் இந்த அம்சம் கிடைக்கும். iPhone 11 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் செயல்திறன் மேலாண்மை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் புதிய மாடல்களின் மேம்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் வடிவமைப்பு காரணமாக செயல்திறன் நிர்வாகத்தின் விளைவுகள் குறைவாகவே கவனிக்கப்படலாம்.
iOS 11.2.6 அல்லது அதற்கு முந்தைய பதிப்பிலிருந்து புதுப்பிக்கப்படும் சாதனங்களில், செயல்திறன் மேலாண்மை முதலில் ஆஃப் செய்யப்பட்டிருக்கும்; சாதனம் எதிர்பாராத விதமாக ஷட் டவுன் செய்யப்பட்டால் அது மீண்டும் ஆன் செய்யப்படும்.
பேட்டரி மற்றும் ஒட்டுமொத்த சிஸ்டம் வடிவமைக்கப்பட்டபடி செயல்படுவதையும், உள் பாகங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்ய, அனைத்து iPhone மாடல்களிலும் அடிப்படையான செயல்திறன் மேலாண்மை இருக்கும். வெப்பமான அல்லது குளிர்ந்த வெப்பநிலைகளில் சாதனம் செயல்படும் விதம், சாதனத்தில் வோல்டேஜ் மேலாண்மை ஆகியவை இதில் அடங்கும். பாதுகாப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் செயல்பாட்டிற்கு இந்த வகையான செயல்திறன் மேலாண்மை அவசியமானது, அதை ஆஃப் செய்ய முடியாது.

உங்கள் பேட்டரியின் அதிகபட்சத் திறன்
பேட்டரி ஹெல்த் திரையில், பேட்டரியின் அதிகபட்சத் திறன் மற்றும் உச்சபட்சச் சக்தியின் திறன் பற்றிய தகவல்கள் உள்ளன.
பேட்டரியின் அதிகபட்சத் திறன் என்பது சாதனத்தின் பேட்டரி புதியதாக இருந்தபோது அதற்கிருந்த திறனுடன் ஒப்பிடும்போது இப்போது உள்ள திறனின் அளவீடு. ஒரு பேட்டரி வேதியியல் ரீதியாக பழையது ஆகும்போது அதன் திறன் குறைந்துவிடும், இதனால் சாதனத்தை வெகு சீக்கிரம் சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். iPhone தயாரிக்கப்பட்டதிலிருந்து அது செயல்படுத்தப்படும் வரையிலான கால அளவைப் பொறுத்து, உங்கள் பேட்டரியின் திறன் 100 சதவீதத்திற்கும் சற்று குறைவாகக் காட்டப்படலாம்.
iPhone 14 மற்றும் அதற்கு முந்தைய மாடல்களின் பேட்டரிகள், சிறந்த சூழல்களில் 500 முழுமையான சார்ஜ் சுழற்சிகள் வரை அவற்றின் அசல் திறனில் 80 சதவீதத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.1 iPhone 15 மாடல்களின் பேட்டரிகள், சிறந்த சூழல்களில் 1000 முழுமையான சார்ஜ் சுழற்சிகள் வரை அவற்றின் அசல் திறனில் 80 சதவீதத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.1 எல்லா மாடல்களுக்கும், சாதனங்கள் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மற்றும் சார்ஜ் செய்யப்படுகிம் விதத்தைப் பொறுத்து திறனின் சதவீதம் மாறுபடும். ஒரு வருட உத்தரவாதத்தில் (துர்க்கியேயில் இரண்டு வருட உத்தரவாதம்), உள்ளூர் நுகர்வோர் சட்டங்களின் கீழ் வழங்கப்படும் உரிமைகளுடன் சேர்த்து, குறைபாடுள்ள பேட்டரிக்கான சேவை பாதுகாப்பும் அடங்கும். உத்தரவாதம் காலாவதியானால் Apple ஒரு கட்டணத்திற்கு பேட்டரி சேவையை வழங்குகிறது. சார்ஜ் சுழற்சிகள் பற்றி மேலும் அறிக.
பேட்டரியின் திறன் மோசமடையும்போது, உச்சபட்சச் செயல்திறனை வழங்கக்கூடிய திறனும் மோசமடையும். பேட்டரி ஹெல்த் திரையில் உச்சபட்சச் செயல்திறனுக்கான பகுதியில் பின்வரும் செய்திகள் காட்டப்படலாம்.
செயல்திறன் சாதாரணமாக உள்ளது
வழக்கமான உச்சபட்சச் செயல்திறனை பேட்டரியின் திறனால் பூர்த்திசெய்ய முடியும் என்பதுடன் செயல்திறன் மேலாண்மை அம்சங்களும் பயன்படுத்தப்படவில்லை என்றால் இந்த மெசேஜ் காட்டப்படும்:
வழக்கமான உச்சபட்சச் செயல்திறனை உங்கள் பேட்டரியால் தற்போது பூர்த்திசெய்ய முடிகிறது.

செயல்திறன் மேலாண்மை பயன்படுத்தப்பட்டது
செயல்திறன் மேலாண்மை அம்சங்கள் பயன்படுத்தப்பட்டவுடன் இந்த மெசேஜ் காட்டப்படும்:
தேவையான உச்சபட்சச் செயல்திறனை பேட்டரியால் வழங்க முடியவில்லை என்பதால் இந்த iPhone எதிர்பாராத விதமாக ஷட் டவுன் செய்யப்பட்டது. இது மீண்டும் நிகழாமல் தடுக்க செயல்திறன் மேலாண்மை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆஃப் செய்...
செயல்திறன் நிர்வாகத்தை ஆஃப் செய்தால், அதை மீண்டும் ஆன் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். எதிர்பாராத விதமாக ஷட் டவுன் செய்யப்பட்டதால் அது தானாகவே மீண்டும் ஆன் செய்யப்படும். ஆஃப் செய்வதற்கான விருப்பமும் கிடைக்கும்.

செயல்திறன் மேலாண்மை ஆஃப் செய்யப்பட்டுள்ளது
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட செயல்திறன் மேலாண்மை அம்சத்தை நீங்கள் ஆஃப் செய்தால் இந்த மெசேஜ் காட்டப்படும்:
தேவையான உச்சபட்சச் செயல்திறனை பேட்டரியால் வழங்க முடியவில்லை என்பதால் இந்த iPhone எதிர்பாராத விதமாக ஷட் டவுன் செய்யப்பட்டது. செயல்திறன் மேலாண்மைப் பாதுகாப்புகளை நீங்கள் ஆஃப் செய்துள்ளீர்கள்.
சாதனம் மீண்டும் எதிர்பாராத விதமாக ஷட் டவுன் செய்யப்பட்டால், செயல்திறன் மேலாண்மை அம்சங்கள் மீண்டும் பயன்படுத்தப்படும். ஆஃப் செய்வதற்கான விருப்பமும் கிடைக்கும்.

பேட்டரியின் திறன் மோசமடைந்துள்ளது
பேட்டரியின் திறன் கணிசமாக மோசமடைந்தால், பின்வரும் மெசேஜும் காட்டப்படும்:
உங்கள் பேட்டரியின் திறன் கணிசமாக மோசமடைந்துள்ளது. பேட்டரியின் செயல்திறன் மற்றும் திறனை முழுமையாக மீட்டெடுக்க, அங்கீகரிக்கப்பட்ட Apple சேவை வழங்குநர் பேட்டரியை மாற்ற முடியும். சேவை விருப்பங்கள் பற்றிய கூடுதல் தகவல்...
இந்த மெசேஜ் பாதுகாப்பு சிக்கலைக் குறிக்கவில்லை. உங்கள் பேட்டரியை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். இருப்பினும், பேட்டரி மற்றும் செயல்திறன் தொடர்பான சிக்கல்களை நீங்கள் அதிகமாக எதிர்கொள்ளக்கூடும். புதிய மாற்று பேட்டரியைப் பெறும் அனுபவத்தை மேம்படுத்த, சேவையைப் பெறுங்கள்.

சரிபார்க்க முடியவில்லை
கீழே உள்ள மெசேஜ் காட்டப்பட்டால், உங்கள் iPhone பேட்டரியைச் is சரிபார்க்க முடியவில்லை என்று அர்த்தம். இந்த மெசேஜ் iPhone XS, iPhone XS Max, iPhone XR மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளுக்குப் பொருந்தும்.2
இந்த iPhoneனில் நம்பகமான Apple பேட்டரி உள்ளதா என்பதை சரிபார்க்க முடியவில்லை. இந்த பேட்டரியிலிருந்து கிடைக்கும் விவரங்கள் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம். மேலும் அறிக...
இந்தத் திரையில் உள்ள பேட்டரியின் திறன் குறித்த தகவல் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம். உங்கள் பேட்டரியைச் சரிபார்க்க, சேவையைப் பெறுங்கள்.

iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max ஆகியவற்றில் பேட்டரியின் திறன் குறித்துப் புகாரளிக்கும்போது மறு அளவீடு செய்தல்
iOS 14.5 மற்றும் பிந்தைய பதிப்புகளில், பேட்டரியின் திறன் குறித்துப் புகாரளிக்கும்போது வழங்கப்படும் தவறான அளவீடுகளைச் சரிசெய்வதற்கான புதுப்பிப்பு சில பயனர்களுக்குச் சேர்க்கப்பட்டுள்ளது. பேட்டரியின் திறன் குறித்துப் புகாரளிப்பதற்கான சிஸ்டம் iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max ஆகியவற்றில் பேட்டரியின் அதிகபட்சத் திறன் மற்றும் உச்சபட்சச் சக்தியின் திறனை மறு அளவீடு செய்யும்.
பேட்டரி சேவை மற்றும் மறுசுழற்சி பற்றி அறிக
நீங்கள் iPhoneனைப் பயன்படுத்தும்போது, அதன் பேட்டரி சார்ஜ் சுழற்சிகளுக்கு உட்படுத்தப்படும். உங்கள் பேட்டரியின் திறனில் 100 சதவீதத்தைப் பயன்படுத்தும்போது, நீங்கள் ஒரு சார்ஜ் சுழற்சியை நிறைவு செய்கிறீர்கள். காலப்போக்கில் பேட்டரியின் திறன் குறையும் என்பதால், அசல் திறனில் 80 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை முழுமையான சார்ஜ் சுழற்சியின் இயல்பான மதிப்பாகக் கருதப்படுகிறது.
iPhone X மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளில், "சரிபார்க்கப்படவில்லை" என்பதற்குப் பதிலாக "முக்கியமான பேட்டரி மெசேஜ்" என்று காட்டப்படலாம். இந்த iPhone பேட்டரியின் திறனைத் தீர்மானிக்க முடியவில்லை."